Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்; சீனியர் அமைச்சர்களை நீக்க பிரதமர் மோடி முடிவு

ஜுன் 08, 2020 06:58

புதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, ஓராண்டு முடிந்து விட்டது. இந்த சமயத்தில், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க, மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலால் இது தடைபட்டு போனது. ஆனாலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என, சீனியர் தலைவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசித்து, சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனராம். இந்த அமைச்சரவை மாற்றத்தில், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு, 'கல்தா' கொடுக்கப்படும் என, சொல்லப்படுகிறது. யார் யாரிடம் இரண்டு அமைச்சகங்களின் பொறுப்பு உள்ளதோ, அவர்களிடமிருந்து ஒரு துறை பறிக்கப்படலாம்.

சில அமைச்சர்களின் செயல்பாடு சரியில்லை என்பதால், அவர்கள் நீக்கப்பட்டு, கட்சி பொறுப்பு தரப்படுமாம். இந்த வகையில், சட்டம் மற்றும் ஐ.டி., துறைகளை கவனித்து வரும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் மாற்றப்படுவர் என, கூறப்படுகிறது. பிரதமர் மோடி, அரசியல்வாதிகளை தவிர்த்து, ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளை, புதிய அமைச்சர்களாக நியமிக்க விரும்புகிறாராம். அவர்கள், எந்தவித அரசியல் நெருக்கடியும் இல்லாமல் பணியாற்றுவர் என்பது முக்கிய காரணம்.

தற்போது அமைச்சர்களாக உள்ள ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர், முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள். இவர்கள், அமைச்சர் பொறுப்புகளை மிகச் சிறப்பாக கவனித்து வருகின்றனர். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததும், செப்டம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்குமாம்.

தலைப்புச்செய்திகள்