Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுமக்கள் வங்கிக்கடன் பெற உதவ, தமிழக பா.ஜ.,வில் இணையதளம் துவக்கம்

ஜுன் 09, 2020 06:49

சென்னை: இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ. சார்பில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொழில் துவங்க வீடு கட்ட கல்வி கற்க என அனைத்திற்கும் வங்கி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிப்போருக்கு உதவுவதற்காக தமிழக பா.ஜ.வில் 'வங்கிக் கடன் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்; மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இக்கமிட்டி சார்பில் வங்கி கடன் பெறுவோருக்கு உதவி செய்வதற்காக 'வங்கி கடன் உதவும் தாமரை திட்டம்' என்ற பெயரில் www.tnbjp.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை தமிழக பா.ஜ. தலைவர் முருகன் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இணையதளத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு கடன்கள் குறித்த விபரம்; கடன் பெறுவதற்கான தகுதிகள்; வங்கி கேட்கும் ஆவணங்கள்; எந்த திட்டத்தில் எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன. வங்கியில் கடன் பெற விரும்புவோர் இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ. நிர்வாகிகள் நேரில் சென்று உதவி செய்வர்.

மேலும் வங்கி கடன் பெற ஆலோசனைகள் வழங்க கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய உதவுவதற்காக ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்கள் எட்டு பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற வங்கி மேலாண் இயக்குனர் ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதாரண மக்களும் கடன் பெற்று தொழில் துவங்க உதவுவதே எங்கள் நோக்கம் என பா.ஜ. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்