Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறப்பு அந்தஸ்து நீங்கியதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; ராணுவ உயரதிகாரி தகவல்

ஜுன் 09, 2020 07:04

ஸ்ரீநகர் : 'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியதை, அங்குள்ள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமைதி திரும்பியுள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறது'என, ராணுவ உயரதிகாரி தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு, கடந்தாண்டு, ஆகஸ்டில் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தற்போது ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு மேற்கொள்ளும் ராணுவப் பிரிவின் தலைவரான, லெப்டினென்ட் ஜெனரல், பி.எஸ். ராஜு, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கி கொள்ளப்பட்டதை, அங்குள்ள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அங்கு படிப்படியாக அமைதி திரும்பியது. இந்தாண்டு, ஜனவரி, பிப்ரவரியில், அமைதி திரும்புவதை, மக்கள் உணர்ந்துள்ளனர். படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. குளிர்கால சுற்றுலாவும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால், கொரோனாவால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதே நேரத்தில், ஜம்மு - காஷ்மீரில் பிரச்னை உள்ளதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது. ஆனால், அங்குள்ள மக்கள், இதை நம்பவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்