Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று?: மாநகராட்சி எச்சரிக்கை

ஜுன் 09, 2020 07:11

சென்னை : 'சென்னையில், 3.47 லட்சம் பேருக்கு, கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயகுமார், அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார், பாண்டியராஜன் மற்றும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னையில், காய்ச்சல் இருக்கிறதா என, வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில், 38 ஆயிரத்து, 198 களப்பணியாள்கள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களும், கணக்கெடுப்பு பணியில் உள்ளனர்.

சென்னையில், 10 நடமாடும் மாதிரி சேகரிப்பு, 40 பரிசோதனை மையங்கள் உள்ளன; இதுநாள் வரை, 1.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 380 பேருக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மேலும், 2 லட்சம், 'ஆர்சனிக் ஆல்பம்' என்ற ஓமியோபதி மருந்துகளை கொள்முதல் செய்து, வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்