Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜுன் 09, 2020 07:25

கோல்கத்தா : மேற்கு வங்கத்தில், வரும் 30 வரை, ஊரங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று அறிவித்தார்.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில், ஐந்தாம் கட்ட ஊரடங்கை, இம்மாதம், 30 வரை நீட்டித்த மத்திய அரசு, 8 முதல், முதல் கட்ட தளர்வுகளையும் அறிவித்தது. இந்நிலையில், நாடு முழுவதும், முதல் கட்ட தளர்வுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, ஓட்டல்கள், வழிபாட்டு தலங்கள், 'மால்'கள், அலுவலகங்கள், பொது போக்குவரத்து இயங்க துவங்கின.

இதையடுத்து, மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில், நேற்று காலை முதல், முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தனி மனித இடைவெளி, காற்றில் பறக்கவிடப்பட்டது. அரசு பஸ்கள், முழு வீச்சில் இயங்கின. அரசு மற்றும் தனியார் அலுவகங்களில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று பணிக்கு திரும்பினர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில், வரும், 15 வரை நீட்டிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு, 30 வரை நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று அறிவித்தார். ஆனால், முதல்கட்ட தளர்வுகள் தொடருமா அல்லது 'வாபஸ்' பெறப்படுமா என்பது குறித்து, அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், நேற்று ஒரே நாளில், எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் வாயிலாக, அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 42 ஆக, உயர்ந்துள்ளது. இதையடுத்து, அங்கு முழு ஊரடங்கை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து, மிசோ தேசிய முன்னணியை சேர்ந்த, அம்மாநில முதல்வர், ஸோரம்தங்கா நேற்று உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்