Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நியூசிலாந்தை போல் தமிழகத்திலும் கொரோனா இல்லாத நிலையை உருவாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்

ஜுன் 09, 2020 08:51

சென்னை: நியூசிலாந்தை போல் கொரோனா இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்குவோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வது பற்றி வீதி, வீதியாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர்
உதயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் கடந்த 2 நாட்களுக்கு முன் 5 அமைச்சர்களை களம் இறக்கியது தமிழக அரசு. அந்த 5 அமைச்சர்களில் ஆர்.பி.உதயகுமாரும் ஒருவர். இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சும் உடன் இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது: நியூசிலாந்தை போல் கொரோனா இல்லாத நிலையை சென்னை அடையும். மேலும், மற்ற மாவட்டங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளை காட்டிலும் சென்னையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வைப்பது சவாலாக உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் அரசு வெளியிட்ட வழிமுறைகளை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் அங்கு தொற்று இல்லாத நிலை இன்று உருவாகியுள்ளது. ஆகையால் இங்கும் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்கமுடியும். 
நியூசிலாந்து பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தியை போல், தமிழக முதல்வரும் கொரோனா இல்லாத நிலை என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடக் கூடிய சூழல் அமையும். கொரோனா விவகாரத்தில் மக்கள் பீதியடையத் தேவையில்லை. போதிய விழிப்புணர்வுடன் இருந்தாலே அந்நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்