Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மொழி பெயர்ப்பில் முழி பிதுங்கிய தங்கபாலு: சமூகதளங்களில் வைரல்

மார்ச் 15, 2019 08:04

நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் பேசினார். அவரது ஆங்கில பேச்சை தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு தமிழில் மொழி பெயர்த்தார். ஆனால், கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், தப்பும் தவறுமாக தங்கபாலு மொழி பெயர்த்தது, சமூகவலை தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.இதோ தங்கபாலுவின் மொழி பெயர்ப்பில் நடந்த குளறுபடிகள். 

ராகுல்: முன்னர் தமிழக அரசை டில்லியில் இருந்தவர்கள் கட்டுப்படுத்தியது இல்லை. 
தங்கபாலு: இப்போது தமிழகத்தை ஆள்பவர்களை மத்தியில் இருந்து பின்புற வழியிலே ஆட்சி நடத்துவதை பார்க்கிறோம். 
ராகுல்: எந்த அரசியலமைப்பையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். மிரட்டல் மூலம் எந்த மாநிலத்தையும் கட்டுப்படுத்தலாம் என மோடி நினைக்கிறார். 
தங்கபாலு:மோடி அவர்கள் இந்தியாவின் இறையாண்மை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களை அத்தனையும் நிர்மூலமாக்கி கொண்டுள்ளார். 


ராகுல்: நான் தமிழக மக்களை நேசிக்கிறேன் 
தங்கபாலு:நாம் அதற்காக தான் போராடி கொண்டிருக்கிறோம். நமது வலிமையை வளமான நேரத்தில் காட்டுவோம் 

ராகுல்: உங்களை பாதுகாப்பேன் என விவசாயிகளிடம் மோடி கூறினார் 
தங்கபாலு:நமது விவசாயிகள் இங்கே போராடி கொண்டிருக்கின்றனர். 

ராகுல்: மோடி, காப்பீட்டு துறையை தனது வர்த்தக நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டார் 
தங்கபாலு:மோடி அவர்கள் மக்களுக்காக அல்ல தொழில் வர்த்தக நபர்களுக்காக ஆட்சி நடத்தி கொண்டுள்ளார் 

ராகுல்: காஷ்மீரின் அனைத்து காப்பீடு துறைகளையும் அனில் அம்பானியிடம் மோடி ஒப்படைத்துவிட்டார். 
தங்கபாலு:இந்தியாவின் முக்கிய பகுதியான காஷ்மீர் அம்பானி கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ராகுல்: அனில் அம்பானி எப்போதும் விமானம் தயாரித்தது இல்லை 
தங்கபாலு: அவர் எப்போதும் உண்மை பேசுகிறவர் அல்ல 

ராகுல்: நாம் தமிழக மக்களை மதிக்கிறோம். 
தங்கபாலு: நரேந்திர மோடி தமிழக மக்களின் எதிரி. 

இப்படியாக மொழி பெயர்த்து ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் தங்கபாபு வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறார். தமிழ் தெரியாத ராகுலுக்கு, தங்கபாலு செய்த தவறுகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கே.எஸ்.அழகிரி சப்பைக்கட்டு: 

இதில் இன்னொரு கொடுமை, தங்கபாலு செய்த தவறுகளுக்கு தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி 'சப்பைக்கட்டு' கட்டியது தான். நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, ''ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நேரடியாக மொழி பெயர்க்க முடியாது. தங்கபாலு சிறப்பாக (?) மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பில் கருத்து மாறாமல் இருந்தால் போதும்'' என்றாரே பார்க்கலாம்.தங்கபாலு மொழி பெயர்ப்பில் கருத்தும் மாறி விட்டது; அர்த்தமும் மாறி விட்டதை கே.எஸ்.அழகிரி அறியாதது ஏனோ என்கிறார்கள் காங்., கட்சியினர். 

பா.ஜ., குற்றச்சாட்டு: 
பா.ஜ.,வினர் கூறும்போது, ''மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தங்கபாலு நிறைய பொய்களைக் கூறி உள்ளார். மோடியைப் பற்றி அவர் மனதில் உள்ளது தான் வெளியே வந்துள்ளது'' என்றனர். 

 

தலைப்புச்செய்திகள்