Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 மாதங்களில் 3வது எம்.எல்.ஏ. மரணம்: சட்டசபையில் திமுக பலம் 97ஆக குறைந்தது

ஜுன் 10, 2020 09:22

சென்னை: சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் மளமளவென குறைந்துள்ளது. 3 டிஜிட்டிலிருந்து தற்போது 2 டிஜிட்டாக எம்.எல்.ஏ.க்கள் பலம் குறைந்துள்ளது கண்டிப்பாக தி.மு.க.வினருக்கு வருத்தமளிக்கக் கூடிய செய்திதான்.

தமிழக சட்டப்பேரவைக்கு 2016 மே 16ம் தேதி 15வது சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தன. தேர்தல் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகின. இதில், மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை சட்டப்பேரவை தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்ததால் மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அ.தி.மு.க. கூட்டணி-134, தி.மு.க. கூட்டணியில், திமுக-89, காங்கிரஸ்-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1 வெற்றி பெற்றிருந்தன. வெற்றி பெற்ற 134 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியினரும் இரட்டை இலை சின்னத்தில் வென்றனர் என்பதால் அது அ.தி.மு.க. கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது.
மொத்தமாக தி.மு.க. கூட்டணி வென்ற தொகுதி எண்ணிக்கை 98 ஆகும். அதில், 89 தி.மு.க. மட்டுமே வென்றது. எனவே, பலம்மிக்க எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது தி,மு,க, கூட்டணி. 

ஆனால், திருவாரூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்ததால், அக்கட்சி பலம் 88ஆக குறைந்தது. இந்நிலையில்தான், 2019ம் ஆண்டு மே மாதம், ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, குடியாத்தம், அரூர், ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பாப்பிரெட்டிபட்டி, பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர், சூலூர், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர், திருவாரூர், விளாத்திகுளம் ஆகிய 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், 9 தொகுதிகளில், அ.தி.மு.க.வும், 13 தொகுதிகளில் தி.மு.க.வும் வென்றன. எனவே, சட்டசபையில் தி.மு.க. பலம் 101ஆக உயர்ந்தது. இந்த நிலையில்தான், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கு.ராதாமணி, கடந்த, 2019 ஜூன் மாதம், புற்றுநோயால் உயிரிழந்தார். இதையடுத்து தி.மு.க.வின் பலம் 100ஆக குறைந்தது. இடைத் தேர்தலிலும், தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், திருவெற்றியூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி கடந்த பிப்ரவரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மீண்டும் டபுள் டிஜிட்டுக்கு இறங்கியது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை. அதாவது 99 என குறைந்தது. அதே மாதம், குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 98 என்ற அளவுக்கு குறைந்தது.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன், கொரோனா நோய் தொற்றால், நேற்று உயிரிழந்தார். எனவே, தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பலம் 97 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்