Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் ஒரே நாளில் இருவர் தற்கொலை

ஜுன் 11, 2020 06:52

திருவனந்தபுரம்: ஒரே நாளில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில், இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து திரும்புவோரால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 65 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில், 1,238 பேர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கேரளாவின் ஆநாடு பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு கடந்த மே 29ம் தேதி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றுமுன்தினம் அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட உடையை அணிந்திருந்ததால், சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை இரண்டு முறை மாதிரிகளைப் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர் அதற்குள் தனி வார்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் எனவும் அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி கொரோனா தனிமை வார்டில் இருந்த நெடுமங்காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்திலிருந்து ஊர் திரும்பிய முருகேசனை, நேற்று காலை தனி வார்டில் அட்மிட் செய்தனர். இந்நிலையில் அவர் நேற்று மாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
'மருத்துவ பணியாளர்களின் அலட்சியமே இருவரின் தற்கொலைக்கும் காரணம்' என, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

'கொரோனாவுக்கு எதிரான போரில் முதன் முறையாக ஒரே நாளில் இரு துர்பாக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக ரிப்போர்ட் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்