Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய - சீன எல்லை பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சு நடத்த முடிவு

ஜுன் 12, 2020 06:59

புதுடெல்லி : சீனாவுடனான எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, துாதரக அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து, இரு நாட்டின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே சுமுகமான பேச்சு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக, துாதரக அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடத்தப்படும்.

பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வரை, இந்த பேச்சு தொடரும். இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே ஏற்கனவே நடந்த பேச்சின்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஆலோசனையை தொடருவது என, இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு நீடிக்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும். எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.

மத சுதந்திரம் தொடர்பாக, அமெரிக்க அமைப்பு, நம் நாட்டை விமர்சித்துள்ளது. நம் நாட்டு குடிமகன்களின் உரிமையை, நம்மால் பாதுகாக்க முடியும். இதில், மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியா, மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதிலும், இந்தியா, மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்