Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் முழு ஊரடங்கா?; வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை

ஜுன் 12, 2020 07:43

சேலம்: மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் இபிஎஸ் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த விழாவில் இபிஎஸ் பேசியதாவது:
8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது; தவறான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது.

கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கின்றனர்.
பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவாக தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்