Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளுக்கொரு பேச்சு, இஷ்டத்திற்கு அறிவிப்பு: தமிழக அரசு மீது தினகரன் சாடல்!

ஜுன் 12, 2020 08:56

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டும் அதைவிடுத்து ஆளுக்கொரு பேச்சு, இஷ்டத்திற்கு அறிவிப்பு, என்பதை கைவிட வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பை கேட்ட பிறகு நோய் இருக்கலாமோ எனச் சந்தேகப்படுபவர்கள் கூட தாங்களாக சென்று எப்படி சோதனை செய்துகொள்வார்கள்?

அரசின் வசம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் (PCR KIT) குறைவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியா இது? என்று மக்களிடம் சந்தேகம் எழுகிறது. கொரோனா தடுப்புப் பணிகளைப் பற்றி ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.

திறமையும், அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்?. இந்த அடிப்படை கூட புரியாமல் அவருக்கு நெருக்கமானவர்; இவருக்கு வேண்டப்பட்டவர் என மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் தனித்தனி ஆவர்த்தனங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்