Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பரவல் இரட்டிப்பாகும் நாள் 17.4 ஆக அதிகரிப்பு

ஜுன் 13, 2020 06:49

புதுடெல்லி: கொரோனா பரவல் வேகமெடுத்திருந்தாலும், அது, இரட்டிப்பாவதற்கான நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை, பரிசோதனை, சிகிச்சை ஆகியவற்றை தீவிரப் படுத்தும்படி, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு, மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதன்பின், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருந்தாலும், ஒட்டு மொத்த அளவில், வைரஸ் பரவல் இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மார்ச், 25ல், ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, கொரோனா பரவல், 3.4 நாட்களில் இரட்டிப்பானது. கடந்த சில வாரங்களுக்கு முன், இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை, 15.4 ஆக அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா பரவல், 17.4 நாட்களில் தான் இரட்டிப்பாகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வைரஸ் பரவல், 3.4 நாட்களிலேயே இரட்டிப்பானது. தற்போது, வைரஸ் பரவல் இரட்டிப்பாவதற்கு, 17.4 நாட்களாகிறது; இது, சாதகமான அம்சம்.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்