Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லையாவுக்கு தஞ்சம் அளிக்க வேண்டாம்: இங்கிலாந்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஜுன் 13, 2020 07:14

புதுடெல்லி: 'வங்கிகளில் மோசடி செய்து தப்பி ஓடிய விஜய் மல்லையாவுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டாம்' என, பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிங் பிஷர் விமான நிறுவனம் மற்றும் மதுபான நிறுவனத்தை நடத்தி வந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை திரும்ப செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.அவரை நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் முயற்சித்தனர். மல்லையாவை நாடு கடத்த, லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மல்லையாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்தனர். இந்நிலையில், மல்லையா தொடர்பான வேறு சில சட்ட சிக்கல்கள் பிரிட்டனில் நிலுவையில் இருப்பதால், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டது. அவர், பிரிட்டன் அரசிடம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: மல்லையாவை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அவர், அரசியல் தஞ்சம் கோரினால், அதை ஏற்க வேண்டாம் என்றும் பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்