Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வந்தே பாரத் வழி இந்தியா திரும்பியவர்களின் அவலம்: கொரோனாவால் 59 சதவீதம் பேருக்கு வேலை காலி

ஜுன் 13, 2020 08:56

புதுடெல்லி: வெளிநாட்டில் ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும். அடுத்த 10 - 15 ஆண்டுகளுக்கு அங்கேயே தங்கி இருந்து, இந்தியாவில் வீடு வாங்கி சம்பாதித்த பிறகு ஊருக்குத் திரும்பி வந்துவிடலாம். இது பலரின் கனவு வாழ்கை. ஆனால், இப்போது அந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் அத்தனை பிரகாசமாக இல்லை. காரணம் இந்த கொடூர நோயான கொரோனா. வந்த பின், தாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாடுகளை விட்டு பலரும் இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

அப்படி திரும்பிய மக்களின் வேலை வாய்ப்புகள் தொடர்பாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகம், மத்திய வெளி உறவுத்துறை அமைச்சகம் இணைந்து SWADES (Skilled Workers Arrival Database for Employment Support) திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்கள். இந்த திட்டம் வழியாக அரசுக்கு சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. வந்தே பாரத் திட்டம் வழியாக, 01 - 07 ஜூன் 2020 வரை, வெளிநாடுகள் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய மொத்த
15,634 பேரில் 9,222 பேர் தங்கள் வேலை பறி போய்விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது 59 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லை.

மீதமுள்ள 6,412 பேருக்கு, வெளிநாடுகளில் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலை இருக்கிறது. இந்த 15,634 பேரில் 47 % பேருக்கு 10 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் இருக்கிறது. 27 % பேருக்கு 5 - 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள். 18 சதவிகிதம் பேருக்கு 2- 5 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள். மீதமுள்ள 8 சதவிகிதம் பேர் தான் 2 ஆண்டுகளுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்டவர்கள் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

அதேபோல இந்த 15,634 பேரில், 2,638 பேர் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், 7,341 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 2,937 பேர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 2,111 பேர் 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தகக்து. சுமார் 4 சதவிகித பேர் தான் 10-வது கூட தேர்ச்சி பெறாதவர்கள்.

இந்த 15,634 பேரில் பெரும்பாலானோர் கட்டுமானத் துறையில் பணி புரிந்து இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் அண்டு கேஸ், சுற்றுலா, விருந்தோம்பல், ஆட்டோமொபைல், ஐ.டி. போன்ற துறைகளில் அதிகம் பணி புரிந்து இருக்கிறார்கள். மிக சொற்ப அளவில் தான் மற்ற துறைகளான நிதி சேவை, வங்கி, ஏவியேஷன், லாஜிஸ்டிக்ஸ், வியாபாரம் போன்ற துறைகளில் வேலை பார்த்து இருக்கிறார்கள்.

இந்த 15,634 பேரில் பெரும்பாலான மக்கள் வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹரைன் போன்ற நாடுகளில் இருந்து தான் அதிகம் இந்தியாவுக்கு வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பி இருக்கிறார்கள். 15,634 பேரில் 72 சதவீதம் மக்கள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்