Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கு 500 ரயில் பெட்டிகள்: மத்திய அரசு அறிவிப்பு

ஜுன் 14, 2020 09:21

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில்வே பெட்டிகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசுக்கு தேவையான உதவியை செய்வோம் எனவும் கூறியுள்ளார்.

டெல்லியில், கொரோனா வைரசால் 38,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,271 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும் பங்கேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர், டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தட்டுப்பாடு உள்ள நிலையில், அதனை சரி செய்வதற்காக 500 ரயில்வே பெட்டிகள் டில்லிக்கு வழங்கப்படும். மாநில அரசுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என அமித்ஷா தெரிவித்தார்.

கெஜ்ரிவால், டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு இடையிலான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. நாங்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அடுத்த ஒரு வாரத்தில், நகரில் உள்ள ஓட்டல்கள, விருந்து அரங்கங்களில் 20 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகரில் உள்ள 80 விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். 40 ஓட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

ஒவ்வொரு நர்சிங் ஹோமிலும் 10 முதல் 49 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் அங்கு 5 ஆயிரம் படுக்கைகள் கிடைக்கும். ஏற்கனவே மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட சில ஓட்டல்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என டில்லி அரசு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்