Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆங்கிலத்தை மறந்து விட்டு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அமிதாப் காந்த்

ஜுன் 14, 2020 09:29

மும்பை: 'ஆங்கிலத்தை மறந்து விட்டு, பிராந்திய மொழிகளுக்கு செல்லுங்கள்' என, நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை, நிடி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் காணொலி கூட்டத்தில் பங்கேற்று பேசிய, அமிதாப் காந்த் மேலும் கூறியதாவது: பிராந்திய மொழிகளை கைக்கொள்வது, முன்னேறுவதற்கான வழியாகும்.

நிதி சம்பந்தப்பட்ட தேவைகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குவது என்றில்லாமல், பிராந்திய மொழிகளிலும் வழங்க வேண்டும். நிதி சேவைகளை, முழுக்க உள்ளூர் மயமாக்க வேண்டும். நிதித்துறை நிறுவனங்கள், பிராந்திய மொழிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், முந்தைய முயற்சிகள் அனைத்தும் வீணாக நேரிடும். மேலும் மக்கள் அந்நியப்பட்டுவிடுவர்.

இந்தியாவில், நிதி சேவைகளை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், 36 சதவீதம் என்றிருந்த நிலையில், 2011லிருந்து அதிகரித்து, இன்று, 80 சதவீதமாகி இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, தேவைப்படும் பிரிவினருக்கு டிஜிட்டல் முறையில் பணத்தை வழங்க முடியும் என்ற நிலைக்கு, இந்தியா உயர்ந்துள்ளது. ஆனால், வெறுமனே சேமிப்பு கணக்கு துவங்குவது, நுண் கடன் வழங்குவது, நுண் காப்பீடு வழங்குவது ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

நம் நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், மூலதன சந்தைகளில், மக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் தான் அதிக முதலீட்டாளர்கள் உள்ளனர். மூலதன சந்தைகளை விரிவுபடுத்த, கிராமப்புற பங்களிப்பு அவசியம்.நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்தாமல், பிராந்திய மொழிகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான், கிராமப்புற பங்களிப்பும் அதிகரிக்கும்.அதே நேரத்தில், முறையான நிதிச் சேவைகளின் பாதுகாப்பும் அதிகரிக்க அவை உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்