Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முன் மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்த, எஸ்.பி., துணை கலெக்டர் இடமாற்றம்

ஜுன் 15, 2020 06:16

இந்துார்: மத்திய பிரதேசத்தில் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங். - எம்.எல்.ஏ.க்கள் முன் மண்டியிட்டு வேண்டிய போலீஸ் எஸ்.பி.,யும் துணை கலெக்டரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.'வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை' என எதிர்க்கட்சியான காங். தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இப்பிரச்னையை முன் வைத்து மாநில அரசை கண்டித்து காங். - எம்.எல்.ஏ.க்கள் ஜித்து பத்வாரி, விஷால் பட்டேல், சஞ்ஜய் சுக்லா ஆகியோர் இந்துாரில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இந்துார் எஸ்.பி., திவாரியும், துணை கலெக்டர் ராகேஷ் ஷர்மாவும் விரைந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங். - எம்.எல்.ஏ.க்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

மேலும் அவர்களுக்கு அருகில் சென்ற இவர்கள் இருவரும் மண்டியிட்டு கைக்கூப்பி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த 'வீடியோ' காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் முன் மண்டியிட்ட எஸ்.பி.,யையும் துணை கலெக்டரையும் தலைநகர் போபாலுக்கு பணியிட மாற்றம் செய்து மாநில அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராகேஷ் ஷர்மாவை பொது நிர்வாகத்துறையின் துணை கலெக்டராகவும், திவாரியை மாநில போலீஸ் தலைமையகத்தின் துணை கண்காணிப்பாளராகவும் நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காங். - எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின் ஜூன் 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தெரிவித்து விடுவிக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்