Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக.,வின் ஆலோசனையை அதிமுக., அரசு நிராகரித்து வருகிறது: ஸ்டாலின் வேதனை

ஜுன் 15, 2020 08:18

சென்னை: தமிழக அரசு, கொரோனா குறித்த விவரங்களை மறைப்பதாகவும், இறப்பு விவரங்களை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்தான செய்தியாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மே 15ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,718 ஆக இருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து ஜூன் 15ம் தேதி இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகம் கடந்த 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகமாக பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதல்வரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும். கொரோனா குறித்த தகவல்களை தமிழக அரசு மறைக்கிறது. சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 32 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், சமூக பரவல் ஏற்படவில்லை என அரசு தவறான தகவல் அளித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.அரசின் பொறுப்பற்ற தனத்தால் தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 பேரை பரிசோதனை செய்தால் ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது. 11 நாட்களில் இரு மடங்காக பாதிப்பு அதிகரிக்கிறது. சென்னையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1597 பேர் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், சென்னையில் மட்டும் 10 சதவீதம் உள்ளது. ஆனாலும், மாநில அரசுக்கு பதற்றமோ படபடப்போ வரவில்லை. தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. மத்திய அரசு ஊரடங்கு அறிவித்த பின் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. அதற்கு முன் வரை குழப்பத்துடன் செயல்பட்டது. குடும்ப அட்டை தாரர்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கவில்லை.

மக்கள் பட்டினியை போக்க ரூ.3,800 கோடி தேவைப்பட்டிருக்கும். மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம் கூட இல்லாத நிதி உதவியை அரசு அளிக்காததற்கு என்ன காரணம்?. முதல் ஊரடங்கின் போது, தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 4வது ஊரடங்கின் போது நோய் தொற்றில் சென்னை 10 சதவீதத்தை கொண்டுள்ளது. கொரோனா பணக்காரர்களின் வியாதி, வெளிநாட்டினர் வெளிமாநிலம் சென்றவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் எனக்கூறி நோய் பற்றி புரிதல் இல்லாமல் முதல்வர் பேசினார். ஆனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 99 சதவீதத்தினர் வெளிநாட்டிற்கு செல்லாதவர்கள் ஆவர்.

பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. கோயம்பேடு பரவல் குறித்து தகவல் தரவில்லை. மரணம் குறித்த தகவல் இல்லாமல், தொற்று பரவல் குறித்து முக்கிய முடிவு எப்படி எடுக்க முடிகிறது? கொரோனா குறித்த செய்திகளை தினசரி வெளியிடுவதில் குளறுபடி நீடிக்கிறது. ஊரடங்கிற்குள் ஊரடங்கை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு அதிகமானது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அத்யாவசிய சேவை திடீரென முடக்கப்பட்டது. இதனால், பல கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.பிரதமரிடம் பேசும் தமிழக அரசு, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?

பரிசோதனை கருவிகள் பற்றி கேள்வி கேட்டதும் திருப்பி அனுப்பினர். லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவெடுத்தது,10ம் வகுப்பு தேர்வு பற்றி குழப்பமான அறிவிப்புகளை அறிவித்தது என தமிழக அரசு வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது. திமுக.,வின் கோரிக்கைக்கு பின், மாவட்ட வாரியாக பரிசோதனை விவரங்களை ஒரு நாள் மட்டும் அரசு அறிவித்தது. சென்னையில், சுகாதார கட்டமைப்பு நொறுங்கி போய்விட்டது. ஒவ்வொரு சென்னைவாசியும் ஆபத்தில் உள்ள சூழலில் இன்று இருக்கிறோம். தொற்று ஏற்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லை. இறப்பு விகிதத்தை மறைப்பதில் உள்நோக்கம் உள்ளது. சென்னையில் 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. மறைக்கப்படும் மரணங்கள் குறித்து குடும்பத்தினர் அடையும் துயரத்தை அரசு புரிந்து கொள்ளுமா? நெருக்கடியை கையாள்வது பற்றி கேள்வி கேட்டால் அரசிடம் பதில் இல்லை. திமுக.,வின் ஆலோசனையை அதிமுக நிராகரித்து வருகிறது. அதிமுக அரசு அனைத்து விஷயங்களிலும் தோல்வியடைந்துள்ளதுபிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்.நெருக்கடி நேரத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேச என்ன தயக்கம்?. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

தலைப்புச்செய்திகள்