Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு: மருத்துவ குழு மதிப்பீடு

ஜுன் 15, 2020 11:04

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளதாகவும், விரைவில் குறைய துவங்கும் என தெரிவித்துள்ள மருத்துவ குழு, பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை வழங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிரூபர்களை சந்தித்த மருத்துவ குழுவினர் கூறியதாவது: தற்போதைய நிலைமை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும், நோய் பரவலை தடுக்க வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். எந்த ஒரு தொற்றும் உச்சத்திற்கு வந்து பின்னர் குறையும் என ஏற்கனவே தெரிவித்திருந்ததோம் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இனிமேல் குறைய துவங்கும்.

சென்னையில் அதிக பாதிப்பு வருவதால், 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. டாக்டர், நர்சுகள், லேப் டெக்னிசியன் என 12 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக 2 ஆயிரம் நர்சுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சென்னையில் 4,5,6 மண்டலங்களில் அதிக நோய் பாதிப்பு காணப்படுகிறது. நாங்கள் முன்னர் கூறியதை அரசு செயல்படுத்தியுள்ளது. அதிக பரிசோதனை செய்வதால், பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கி நோயை கட்டுப்படுத்த பரிந்துரை வழங்கியுள்ளோம். பரிசோதனையை அதிகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தால் இறப்பை குறைக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கியுள்ளோம்.

தொற்று அதிகரித்தது எதிர்பார்த்தது தான். பாதிப்பு அதிகரிக்கும் போது உயிரிழப்பு அதிகரிக்கும். அரசு நடவடிக்கை எடுப்பதால் மட்டும் பாதிப்பு குறையாது. மாஸ்க் அணிவது, கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு செல்வதை தவிர்ப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை மக்கள் மேற்கொண்டால் மட்டுமே பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இப்போது பாதிப்பு குறைந்தாலும், 4 மாதத்திற்கு பின்னர், சீனாவை போல், இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளது.

சாதாரண அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம். காய்ச்சல், உடல்வலி போன்றவை, முதல் நாள் வந்துவிட்டு இரண்டாவது நாள் போனாலும் கொரோனா அறிகுறிதான். 2 - 3 நாட்கள் காய்ச்சல் இருந்தாலும் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்