Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக., எம்.எல்.ஏ. மனைவிக்கும் கொரோனா: சென்னை மருத்துவமனையில் அட்மிட்

ஜுன் 16, 2020 09:23

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனியின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை உறுப்பினராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழனி பதவி வகித்து வருகிறார். அவருக்கு வயது 57. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிவாரண பொருள்களை நாள்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் வழங்கி வந்தார்.

இப்படி தொடர்ந்து பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டிருந்ததால், நிறைய பேருடன் நெருங்கி பழகும் நிலை ஏற்பட்டது. இதனால், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இவருக்கு நீரிழிவு நோயும் உள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் பழனி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், பழனியின் மனைவிக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இருவரும் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தொகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

முன்னதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. சட்டசபை உறுப்பினர் அன்பழகன், தொடர்ந்து மக்களோடு கலந்து, மக்கள் சேவையில் ஈடுபட்டதால், கொரோனா தாக்கத்திற்கு உள்ளானார். அவருக்கு ஏற்கனவே, பல்வேறு, உடல்நல பிரச்சினைகள் இருந்தன என்பதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்