Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெற்றோருக்கு பாரம் தர விரும்பாத பிள்ளை: சாலையோரம் நுங்கு விற்கும் மருத்துவ மாணவர்

ஜுன் 16, 2020 10:10

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் ஒருவர் தனது பெற்றோருக்கு உதவியாக நுங்கு விற்பனை செய்து வருகிறார். நான்காம் ஆண்டு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், புத்தக செலவு உள்ளிட்ட தேவைகளுக்காக அவர் இந்த பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளியில் பயின்று தகுதி அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த இவர் இதுவரை அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தாண்டு 4-ம் ஆண்டுக்கு செல்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பில் இவர் பெற்ற அதிக மதிப்பெண் காரணமாக டாக்டருக்கு படிக்க மெரிட்டில் இடம் கிடைத்தது.

மருத்துவ மாணவர் சிவாவின் தந்தை ராஜ்குமார் பனை மரங்களை குத்தகைக்கு பிடித்து நுங்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கோவை-ஈரோடு மாவட்ட எல்லையில் மருத்துவ மாணவர் சிவாவின் கிராமம் அமைந்துள்ளதால், மேட்டுப்பாளையத்திற்கு சென்று அங்கு மக்கள் கூடும் இடங்களில் நுங்கு விற்பனை செய்வது அவரது வழக்கம்.

தற்போது கொரோனா எதிரொலியாக கல்லூரி திறக்கப்படாததால் ஊரில் இருக்கும் சிவா, தனது நான்காம் ஆண்டு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், புத்தக செலவு உள்ளிட்ட தேவைகளுக்காக சொந்தமாக உழைத்து பணம் சேர்த்து வருகிறார். இதனிடையே இணையம் இல்லாமல் இருக்கமுடியாது என நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் பெற்றோருக்கு உதவிக்கரமாக உழைத்து முன்னேற துடிக்கிறார் சிவா.

மேலும், செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் மாடுகளை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இன்னும் ஓராண்டில் டாக்டராக உள்ள சிவாவே பார்த்துக்கொள்கிறார். இது தொடர்பாக மருத்துவ மாணவர் சிவா தெரிவித்ததாவது;

நான் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்து , நான்காம் ஆண்டு செல்ல இருக்கிறேன். இறுதியாண்டு என்பதால் ஒரு லட்சத்திற்கும் மேல் கட்டண செலவு வருகிறது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், என்னை பற்றி தொலைக்காட்சியில் வெளியாகிய செய்தியை பார்த்துவிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனின் உதவியாளர் அழைத்து பேசினார். கல்லூரி இறுதியாண்டு கட்டணத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் உதவி செய்வதாக கூறச் சொன்னதாக தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பால் கல்லூரி திறக்கப்படவில்லை. பெற்றோருக்கு பாரம் தரக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் நுங்கு விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு மருத்துவ மாணவர் சிவா தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்