Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாலிபர் கொலை: உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ஜுன் 18, 2020 09:28

நாகை:  சீர்காழி அருகே வாலிபரை கொலை செய்த அனைவரையும் கைது செய்யக்கோரி அவரது உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூர் பெரிய தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன்( 53). இவர்  சம்பவத்தன்று வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஆனந்தன்(47)  ராமச்சந்திரன் வீட்டு வாசலில் எச்சில் துப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன்இ அதே பகுதியை சேர்ந்த கட்டிடதொழிலாளி சுகதேவ்(33) ஆகிய இருவரும் சேர்ந்து ஆனந்தனிடம் கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த சுகதேவ்  ஆனந்தனை திட்டியதுடன் அடித்துள்ளார். இதனை அறிந்த ஆனந்தன் மகன் அரவிந்தன்(27) மற்றும் அவரது உறவினர்கள் ரவிச்சந்திரன்(48)  பாலகுரு  சிவசாமி ஆகிய 4 பேரும் சேர்ந்து சுகதேவை கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகதேவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன்  ரவிச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாலகுரு  சிவசாமி ஆகியோரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுகதேவ் உடல் மருவத்தூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது சுகதேவ் உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல் இதற்கு காரணமாக அனைவரையும் கைது செய்யக்கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தலைமறைவாக உள்ள பாலகுரு சிவசாமி ஆகிய 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதையடுத்து சுகதேவ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் மருவத்தூர் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

தலைப்புச்செய்திகள்