Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில்வே, தொலைதொடர்பு சேவையில் சீன நிறுவனங்கள் அதிரடி புறக்கணிப்பு

ஜுன் 18, 2020 11:04

புதுடெல்லி: லடாக் எல்லையில், 20 இந்திய வீரர்களை சீன ராணுவம் கொன்றதற்கு பதிலடியாக, சீனாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் இந்தியாவில், மறைமுகமாக பல துறைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு நாடுகள் இடையே பதட்டங்கள் அதிகமாகிவரும் நிலையில், ராணுவ தரப்பில் பேச்சு ஒரு பக்கம் நடந்தாலும், சீன வணிகங்களுக்கு எதிரான முதல் அடி இந்தியாவில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை சீன பொறியியல் அமைப்பு இழக்க உள்ளது. மேலும், தொலைதொடர்புத் துறை (டி.ஓ.டி.) அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) சீனத் தயாரிப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், இரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் வட்டம், இந்த தகவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். தனது 4 ஜி வசதிகளை மேம்படுத்துவதில் சீன தயாரிப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்று தொலைத் தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. முழு டெண்டரும் இனி புனரமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை சார்வதை குறைக்க தனியார் மொபைல் சேவை வழங்குநர்களை டி.ஓ.டி. கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், சீன உபகரணங்களிலிருந்து தொலை தொடர்பு துறையில் வசதிகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு விஷயங்களில், சமரசம் செய்வதற்கு சமம் என்பதால், அதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், கிழக்கு மண்டல சரக்கு ரயில்பாதையில் சீனாவின் ரயில்வே சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன் (சி.ஆர்.எஸ்.சி.) கார்ப் நிறுவனத்தின் டெண்டரை நிறுத்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

2016ம் ஆண்டில், 400 கி.மீ. க்கும் மேற்பட்ட நீளம் கொண்ட ரயில் பாதைகளில் சிக்னலிங் அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை சி.ஆர்.எஸ்.சி. பெற்றிருந்தது. ரயில்வே இப்போது இந்தியர்களை மட்டுமே டெண்டரில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தங்களில் உத்தரபிரதேசத்தின் நயாபாபூர்-முகலசராய் பிரிவில் 413 கி.மீ. தூரத்திற்கு இரட்டை ரயில் பாதைகளுக்கான சிக்னலிங், தொலைத்தொடர்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை வடிவமைத்தல், வழங்குதல், உற்பத்தி செய்தல், சோதனை செய்தல் ஆகியவை அடங்கும். இந்தியா, சீனா மோதல் வலுத்துள்ள நிலையில் ரயில்வே, தொலைத்தொடர்பு சேவையில் புறக்கணிப்பு காரணமாக சீன நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

தலைப்புச்செய்திகள்