Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: 300 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு

ஜுன் 19, 2020 09:35

புதுடெல்லி: சீனாவிலிருந்து மற்றும் பிற நாடுகளிலிருந்தும், சுமார் 300 இறக்குமதி தயாரிப்புகளுக்கு அதிக வரியை விதிக்கவும் தடைகளை விதிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த திட்டம் மறு மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சுய சார்பு இந்தியா என்ற திட்டத்தை அமல்படுத்த வசதியாக இவ்வாறான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் புதிய வரி கட்டமைப்புகள் படிப்படியாக அமலாகும். இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதால் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆலோசனையில் ஈடுபட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம், ராய்ட்டர்ஸ் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

160 முதல் 200 தயாரிப்புகளின் இறக்குமதி வரிகளை உயர்த்துவது மற்றும்து கடுமையான தர பரிசோதனைகளுக்கு உட்படுத்த வாய்ப்புள்ளது. "நாங்கள் எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை, ஆனால், சீனா போன்ற நாடுகளுடன் நிலவும் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அதிகாரி கூறியுள்ளார்.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 88 பில்லியன் டாலர் மதிப்புடையது. சீனாவிடம், 53.5 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை குறைத்தால்தான் அன்னிய செலவாணி கையிருப்பை தக்க வைக்க இந்தியாவால் முடியும். 2019 ஏப்ரல் மற்றும் 2020ம் ஆண்டு பிப்ரவரி 2020 வரையிலான காலகட்டத்தில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 46.8 பில்லியன் டாலராக இருந்தது. 

மோடி 2014 ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும், பாதுகாப்பதாகவும் தெரிவித்து வருகிறார். அவர் "மேக் இன் இந்தியா" திட்டத்தை ஊக்குவித்தார். கடந்த மாதம் "ஆத்மனிர்பர் பாரத்" அல்லது சுய சார்பு இந்தியா பிரச்சாரத்தை அறிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்னணு பொருட்கள், பொம்மைகள் மற்றும் பல குறைந்தவிலை பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளை இந்தியா ஏற்கனவே உயர்த்தியது. இது வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சனங்களை எழுப்பியது.
உதாரணமாக, ஸ்வீடன் கூட இந்தியாவின் செயல்பாடால் அதிருப்தி தெரிவித்தது. ஆனால், இறக்குமதியை குறைப்பதே இந்தியாவின் தற்போதைய முழு நோக்கமாக இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் உறுதி செய்கின்றன. 

தலைப்புச்செய்திகள்