Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக் மோதலில் 43க்கும் அதிகமான சீன வீரர்கள் பலி: மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்

ஜுன் 22, 2020 02:19

புதுடெல்லி: இந்திய ராணுவத்தினரின் பதிலடி தாக்குதலில் 43க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் உயிரிழந்திருக்கலாம் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வானில், 15ம் தேதி, இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர், வீர மரணம் அடைந்தனர்.இதில், சீனா தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து, அந்நாட்டிடம் இதுவரை, அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், சீனா தரப்பில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான, வி.கே.சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கல்வானில் நடைபெற்ற மோதலில், சீனா தரப்பில் சிக்கிய நம் ராணுவ வீரர்களை, அவர்கள் விடுவித்ததாக, ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நம்மிடம் சிக்கி இருந்த சீன வீரர்களும், திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான, சீன வீரர்களின் எண்ணிக்கையை, அவர்கள் தரப்பில் தெரிவிக்க மாட்டார்கள். ஏனெனில், அங்குள்ள ஆட்சியாளர்கள், மக்கள் தரப்பில் கேள்விகளை எழுப்புவதையோ, கருத்து தெரிவிப்பதையோ விரும்பாதவர்கள். அதனால், மக்களிடம் அவர்கள் உண்மைகளை கூறுவதில்லை. தொடக்கத்தில், சீன வீரர்கள், 43 பேர் பலியானாதாக, நம் வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை விட அதிக எண்ணிக்கையில், இறப்பு இருக்கலாம் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்