Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்மோகன் சிங், ராணுவத்தை அவமதிப்பதை நிறுத்த வேண்டும்: பா.ஜ., பதிலடி

ஜுன் 22, 2020 02:28

புதுடெல்லி: மத்திய அரசுக்கு அறிவுரை கூறும் மன்மோகன் சிங், காங்கிரஸ் ஆகியவை நமது ஆயுதப்படைகளை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

லடாக்கில் நடந்த சீனா அத்துமீறல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அரசுக்கு அறிவுரை கூறி அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கை வெறும் வார்த்தை விளையாட்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைவர்களின் இது போன்ற அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். இதே காங்கிரஸ் தான், ஆயுதப்படைகள் குறித்து கேள்வி எழுப்பியதுடன் அவமரியாதை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அவரது வார்த்தைகள் மூலம், யார் ஒற்றுமைக்கான சூழ்நிலையை கெடுக்க போகிறார்கள் என்பது தெரியவரும். இதனை மன்மோகன், அவரது கட்சி தலைமைக்கு புரிய வைக்க வேண்டும்.
இந்தியாவுக்கு சொந்தமான 43 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை சீனர்களிடம் எதிர்ப்பு காட்டாமல் ஒப்படைத்த கட்சியை சேர்ந்தவர் தான் மன்மோகன் சிங். காங்கிரஸ் ஆட்சியின் போது, எந்த எதிர்ப்பும் காட்டாமல், இந்திய பகுதிகள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனாவின் திட்டங்கள் குறித்து கவலைப்படுபவரது ஆட்சியில் தான், நூற்றுக்கணக்கான சதுர கி.மீ., இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.

தற்போது அவர் சீனா குறித்து கவலைப்படுகிறார். அவரது ஆட்சியில் 2010 முதல் 2013 வரை 600 ஊடுருவல்கள் நடந்தன. தற்போது மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதை மன்மோகன் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான், ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை செய்யப்பட்டது. அதனை தே.ஜ., அரசு மாற்றியுள்ளது. மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும், நமது ஆயுதப்படைகள் மீது மீது கேள்வி எழுப்பி அவமரியாதை செய்வதை நிறுத்த வேண்டும். சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் நடத்திய போதும் இதனை செய்தீர்கள். தேசத்தின் ஒற்றுமையை புரிந்து கொள்ளுங்கள். இதற்கான காலம் கடந்து போகவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்