Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூகவலைதளங்களில் வெறுப்பு பேச்சை, ஆன்லைன் சமூகம் கைவிட வேண்டும்: ரத்தன் டாடா

ஜுன் 22, 2020 02:31

புதுடெல்லி: மற்றவர்களை தாழ்த்திப் பேசுதல், வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுதல் போன்றவற்றை ஆன்லைன் சமூகம் நிச்சயமாக கைவிட வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் தனிமனித விமர்சனம், வெறுப்பை உண்டாக்கும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இது பல நிலைகளில் ஆபத்தை உண்டாக்கும் என விமர்சகர்கள் எச்சரித்தாலும், குறைந்தபாடில்லை.

இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த 2020-ம் ஆண்டு, அதிகமாகவோ, குறைவாகவோ, நம் அனைவருக்கும் சவாலான ஆண்டாகவே இருந்து வருகிறது. சமூகவலைதளங்களில் நேரம் செலவழிக்கும் நாம், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறோம். முன்முடிவுகளுடன் ஒருவரை ஒருவர் விரைவாகவும், வன்மத்துடனும் உடனே வார்த்தைகளால் காயப்படுத்துகிறோம்.

குறிப்பாக இந்த நேரத்தில் ஒற்றுமையுடனும், ஆதரவாகவும் இருக்கவேண்டியது அவசியம். புரிந்துகொள்ளுதலும், பொறுமையுடன் இருத்தலும் தான் இந்த நேரத்தில் நமக்கு தேவையாக இருப்பது. ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் இல்லை. மற்றவர்களை தாழ்த்திப் பேசுதல், வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுதல், இதை ஆன்லைன் சமூகம் நிச்சயமாக கைவிட வேண்டும். கிண்டல் செய்வதையும், வெறுப்பை பரப்புவதையும் விட்டுவிட்டு ஆன்லைன் தளங்களை அனைவருக்குமானதாக மாற்றுங்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்