Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீஹாரில் லாலு கட்சி உடைந்தது; 5 எம்.எல்.சி.,க்கள் விலகல்

ஜுன் 24, 2020 07:01

பாட்னா : பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி உடைந்தது. இந்த கட்சியை சேர்ந்த, 5, எம்.எல்.சி.,க்கள், அக்கட்சியிலிருந்து விலகினர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில சட்டசபைக்கு, இந்தாண்டு, அக்டோபர் - நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, பீஹாரில், காலியாக உள்ள, ஒன்பது எம். எல்.சி., இடங்களுக்கு, அடுத்த மாதம், 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியை சேர்ந்த ஐந்து எம்.எல்.சி.,க்கள், அக்கட்சியலிருந்து நேற்று விலகினர். அவர்கள், சட்ட மேலவை தலைவர், அவதேஷ் சிங்கை சந்தித்து, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியிலிருந்து, தாங்கள் விலகியதை தெரிவித்தனர். மேலும், 'தங்களை, தனி பிரிவாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; ஐக்கிய ஜனதாதளத்தில் இணைக்க அனுமதிக்க வேண்டும்' என, அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பீஹார் சட்ட மேலைவையில், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு, எட்டு உறுப்பினர்கள் இருந்தனர். இதில், ஐந்து பேர் விலகியதையடுத்து, அதன் பலம், மூன்றாக குறைந்து விட்டது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும், மூன்று மாதமே உள்ள நிலையில், ஐந்து கவுன்சிலர்கள் விலகியுள்ளது, ராஷ்ட்ரீய ஜனதாதள தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கிடையே, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர், லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவராகவும், ராஷ்ட்ரீய ஜனதாதள துணை தலைவருமாகவும் இருந்த, ரகுவன்ஷ் பிரசாத், கட்சியின் துணைத்தலைவர் பதவியிலிருந்து, நேற்று காலை விலகினார். இவர், கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வைஷாலி தொகுதியில், லோக் ஜனசக்தி சார்பில் போட்டியிட்ட ராமா சிங்கிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், ராமா சிங், லோக் ஜனசக்தியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதாதளத்தில் சேர கட்சி தலைமை சம்மதித்துவிட்டது. இதனால், ரகுவன்ஷ் பிரசாத், அதிருப்தியில் இருந்தார். இது பற்றி அவர் கூறுகையில், 'தகுதியற்றவர் களையும், துரோகம் செய்தவர்களையும், கட்சியில் சேர்த்துக் கொள்ள, தலைமை சம்மதித்துள்ளது, வருத்தம் அளிக்கிறது. அதனால், கட்சியின் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். கட்சியிலிருந்து விலகவில்லை' என்றார்.

பீஹாரில் அக்டோரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலர், 'தங்களால் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்க முடியாது; அதனால், தபால் ஓட்டு மூலம் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர்

.இது பற்றி, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் ஆணையம் கருத்து கேட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் விதிகளில், மத்திய அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. இது குறித்து, மத்திய சட்ட அமைச்க உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாற்று திறனாளிகள் மற்றும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், '12டி' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வழங்கி, தபால் மூலம் ஓட்டளிக்க, சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், தபால் வழியாக ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்த அனுமதி, இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்