Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் ஆட்டம் காட்டும் கொரோனா: முதல் முறையாக ஒரே நாளில் 59 பேர் பாதிப்பு

ஜுன் 24, 2020 10:05

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை (இன்று) முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
புதுச்சேரியில் 441 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 58 பேர் புதுவையைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் மாஹே பகுதியைச் சேர்ந்தவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 276 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் இதுவரை 176 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 461 ஆக உயர்ந்திருக்கிறது. புதுவையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் இன்று (நேற்று) ஒரே நாளில் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் இருக்க வேண்டும். ஆகையால், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிற நோய்களுக்காக அனுமதிக்கப்படுள்ள நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துமனைக்கு மாற்றம் செய்யப்படுவர். இதனால் வரும் 26ம் தேதி முதல் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக கொரோனா மருத்துவமனையாக செயல்படும். இதேபோல் நாளை (இன்று) முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

தலைப்புச்செய்திகள்