Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓசூர் வழியாக கர்நாடக எல்லை சென்ற 7 தமிழர்கள் அதிரடி கைது

ஜுன் 24, 2020 05:55

 

ஓசூர்: தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக எல்லை அத்திப்பள்ளியில் நுழைந்த 7 தமிழர்கள் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கெடுபிடிகள் தொடர்கின்றன. தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு தமிழக அரசு பஸ்கள் மூலம் வந்து இங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தமிழக எல்லையான ஜூஜூவாடிக்கு செல்கின்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடைப் பயணமாக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி பார்டருக்கு சென்று அங்கிருந்து பெங்களூரு சென்று விடலாம் என்று பொதுமக்கள் செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடக மாநிலத்திற்குள் பொதுமக்கள் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதித்ததுடன் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களை கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதித்து வருகின்றனர்.

மேலும் அங்கு சுற்றி உள்ள குறுக்கு பாதைகள் எல்லாம் ஜே.சி.பி. மூலம் குழிகள் தோண்டப்பட்டு முள் வேலிகள் அடைக்கப்பட்டு வந்த நிலையில் மக்கள் அதையும் தாண்டி செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் கர்நாடக மாநில காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது தமிழகத்திலிருந்து தடுப்புகளை தாண்டி கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்ததாக கூறி 7 பேரை கைது செய்த போலீசார் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சார்ந்த சந்திரப்பா, ஓசூரை சேர்ந்த விஜயன், விக்னேஷ்வர், மத்தூர் பகுதியை சார்ந்த சேகர், கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்த மங்கலத்தைச் சேர்ந்த சரத்குமார், திருப்பூரைச் சார்ந்த சவுந்தரராஜன் மற்றும் பெங்களூரு விஜய நகரை சேர்ந்த குமரேசன் ஆகிய 7 பேரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கர்நாடக மாநில அரசின் கெடுபிடி காரணமாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்