Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; ஒரே நாளில் 2 லட்சம் மாதிரிகள் சோதனை

ஜுன் 25, 2020 08:31

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை மாதிரிகள் எண்ணிக்கையும் 73.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,870 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; 424 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4.72 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 14,907 பேர் பலியாகி உள்ளனர். தொற்றுகளின் எண்ணிக்கை கூடுவதற்கு, பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்ததே காரணமாகும். இந்தியாவில் தற்போது பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 730 அரசு ஆய்வகங்கள், 270 தனியார் ஆய்வகங்கள் என 1000 ஆய்வகங்கள் உள்ளன.

இதன் மூலம் நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,15,195 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதில், 1,71,587 மாதிரிகள் அரசு ஆய்வகங்களிலும், 43,608 மாதிரிகள் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவே தனியார் ஆய்வகங்களிலேயே ஒரு நாளைக்கு பரிசோதிக்கப்பட்ட மிக அதிக சோதனை அளவாகும். இதுவரை இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 73,52,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைபடி, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 10,495 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் குணமானவர்கள் எண்ணிக்கை 2,58,684 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 56.71% ஆக உள்ளது. தற்போது, ​​1,83,022 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்