Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தந்தை-மகன் சாவு சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் அரியலூரில் கடைகள் அடைப்பு

ஜுன் 25, 2020 09:24

பெரம்பலூர்: சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அவர்களது உருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகனான பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையை திறந்து வைத்திருந்தது தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் போலீசார் தாக்கியதில் தந்தை மகன் இறந்ததாக கூறி சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களது உறவினர்கள் சக வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த நிலையில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகன் இறந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் செல்போன் கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 640 செல்போன் மற்றும் ரீசார்ஜ் செய்யும் கடைகள் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மேலும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்திசிலை அருகே ஒரு மொபைல் கடையின் முன்பு ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரது உருவப்படங்கள் வைக்கப்பட்டு சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் மாநில துணை செயலாளர் சசிகுமார் பொருளாளர் பாலவெங்கடேஷ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பாடாலூரில் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் உயிரிழந்த இருவரது உருவப்படங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு எம்.பி.கோவில் தெரு சின்னகடை தெரு பெரிய கடை தெரு திருச்சி சாலை செந்துறை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவு மருந்து காய்கறி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக செல்போன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் செந்துறை உடையார்பாளையம் விக்கிரமங்கலம் ஆண்டிமடம் வி.கைகாட்டி மீன்சுருட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான செல்போன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 800 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்று அரியலூர் நகர வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.

ஒரு சில செல்போன் கடை உரிமையாளர்கள் உயிரிழந்த தந்தை- மகன் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்