Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒசாமா பின்லேடன் தியாகி: பார்லிமென்டில் புகழ்ந்த இம்ரான் கான்!

ஜுன் 26, 2020 09:47

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை வெளியான அடுத்த தினமே, பார்லிமென்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழந்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கையில், அந்நாடு இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பார்லிமென்டில் பேசினார். அப்போது அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்.” என்று பேசினார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி இம்ரான் கானுக்கு கடும் கண்டனத்தை பெற்றுத் தந்துள்ளது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரே இம்ரான் கானை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

“ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்” என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி ஷெர்ரி ரெஹ்மான் கூறினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப், “எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா, அவர் என்றைக்கும் பயங்கரவாதி தான்.” என கண்டித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்