Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழங்காலுக்கும் மொட்டை, தலைக்கும் முடிச்சுபோடும் பா.ஜ.க.: சிதம்பரம்

ஜுன் 27, 2020 03:03

புதுடெல்லி: "2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன சம்பந்தம்? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பா.ஜ.க. முடிச்சு போடுகிறது.  சீன ஆக்கிரமிப்பை எப்படி?, எப்போது இந்த மோடி அரசு அகற்ற போகிறது? என்ற கேள்வி கேட்டால் அதற்கு இதுவரை பதில் இல்லை," என்று பா.ஜ.க.வை கேள்வி கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் போட்டுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் நட்டா ஒரு ட்வீட் போட்டு முந்தைய காங்கிரஸ் அரசை விமர்சித்திருந்தார். அதில் அவர், "பிரதமரின் நிவாரண நிதி திட்டம் என்பது, பேரிடர் காலங்களில் அந்த நிவாரண நிதி திட்டங்களில் வந்த நிதியுதவியை கொண்டு நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்யப்படும். 
இந்த திட்டம் பிரதமருடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியது. இந்த  பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி இருந்தார்.

அத்துடன், மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் பிரதமர் நிவாரண நிதி குழுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்தார். அவரே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கும் தலைவராக இருந்துள்ளார்" என்று கூறி, இது சம்பந்தமான ஆதாரம் என்று போட்டோவையும் அந்த ட்வீட்டில் ஷேர் செய்திருந்தார்.  நட்டாவின் இந்த குற்றச்சாட்டும், ட்வீட்டும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

ஏற்கனவே பா.ஜ.க. அரசு என்றால் கொதித்து கொதித்து ட்வீட் போடும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் இந்த விஷயத்தையும் லேசில் விடவில்லை. வரிந்து கட்டிக் கொண்டு ஒரு ட்வீட்டை போட்டு, பா.ஜ.க.வை ஒரு கேள்வியும் கேட்டுள்ளார்.
அதில், "2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன சம்பந்தம்? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் பா.ஜ.க. முடிச்சு போடுகிறது. அந்தமான் தீவின் சுனாமி நிவாரணத்துக்கு ராஜீவ்காந்தி அறக்கட்டளை 2005-ல் ரூபாய் 20 லட்சம் பெற்றது உண்மைதான்.

பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் அந்த நிவாரண பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு அதற்கு முறையான கணக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு? சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது  இந்த மோடி அரசு அகற்ற போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்