Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்

ஜுன் 28, 2020 07:25

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் ஆயிரம் பேரை தாக்கி கொரோனா தாண்டவமாடுகிறது. இதில் இருந்து மதுரையை தப்புவிக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையை கொரோனா பாதிப்பு, ஆட்டம் காணச் செய்துள்ளது. நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு, பலி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தில் 20வது இடத்தில் இருந்த மதுரை மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. நேற்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை பின்னுக்குத்தள்ளி, முதல் மூன்று இடத்திலுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரிசையில் 4வது இடத்தை வசப்படுத்தியது.

மாவட்டத்தில் கொரோனா 'பாஸிட்டிவ்' இறப்பு 20ஐ கடந்துவிட்டது. இன்னொரு புறம் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகளை பரிசோதிப்பதற்காக கொரோனா மருத்துவமனையில் துவங்கப்பட்ட 'சாரி' வார்டில் தினமும் கொத்து, கொத்தாய் நோயாளிகள் செத்து மடிகின்றனர். மூன்று நாட்களில் மட்டும் 13, 5, 7 என 25 பேர் இந்த வார்டில் மரணத்தை தழுவியுள்ளனர்.இறந்தவர்களின் உடல்களை வைக்க கூட மருத்துவமனையில் இடமில்லை. சகல வசதியும் நிறைந்த சென்னையே சின்னாப்பின்னமாகிப் போன நிலையில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டும் கொண்ட மதுரை எப்படி தப்புமோ என்று மக்கள் தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் பாதிப்பு துவங்கி மூன்று மாதமாகிறது. இதுவரை 1703 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இறுதி 8 நாளில் மட்டும் 1072 பேரை தாக்கி கொரோனா அசுர வேகம் எடுத்துள்ளது. ஆனால் இதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

1.இதுவரை 5 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகின்றனர். வைரஸின் வேகம் நீடித்தால் எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு படுக்கை இருக்காது. தற்போதைக்கு 375 படுக்கையில் தான் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இன்றைக்கு இது அதிகமாக தெரியலாம். அறிகுறியுடன், கடுமையான நோயுடன் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் இதற்கும் பற்றாக்குறை ஏற்படாலம். இப்போதே ஆக்ஸிஜன் வசதியை அதிகரிக்க வேண்டும்.

2.சென்னையில் கொரோனா வேகம் துவங்கியதும் வீதிகள் தோறும் காய்ச்சல் முகாம்கள் மூலம் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். தற்போது மதுரை நகரில் நடக்கும் காய்ச்சல் முகாம்களை மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும்.

3.இதுவரை 21 கல்லுாரிகளில் கொரோனா வார்டு அமைக்க ஏற்பாடு நடந்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்வது அவசியம்.

4.மதுரை அரசு மருத்துவமனையில் 1250 பேரை சோதிக்கும் அளவு தான் பரிசோதனை கருவி உள்ளது. உடனடியாக அரசிடம் கூடுதல் கருவிகளை பெற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தனியார் பரிசோதனை கூடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

5.சளி மாதிரியை சேகரித்ததும் மக்களை தனிமைப்படுத்தாமல் ரோட்டில் நடமாட விடுவதும் தொற்று அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. முடிவு கிடைக்கும் வரை கட்டாய தனிமை அவசியம்.

6. அறிகுறி இல்லாத நோயாளிகளை வீட்டிலையே தனிமைப்படுத்தி சிகிச்சை தரலாம். இதனால் தீவிர நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும்.

7.இந்த நடவடிக்கைகளையெல்லாம் மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சென்னை போன்று மதுரை நிலையும் ஆகி விடும். நிலமை எல்லை மீறினால் சென்னையில் சமாளிக்கும் அளவில் துளி கூட மதுரையில் சமாளிக்க முடியாது.

8.பொதுமக்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவசர தேவைக்கு வெளியே வந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும்.

தலைப்புச்செய்திகள்