Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்

ஜுன் 30, 2020 09:09

மதுரை: மதுரையில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளை விட்டு வெளிவரவில்லை.

மதுரை நகரில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதிகள் பரவை பேரூராட்சி மதுரை கிழக்கு மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கு கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இறைச்சி மீன் கடைகள் உள்பட மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. நகரின் நுழைவு வாயில்களில் போலீசாரின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மருந்தகங்கள் மற்றும் பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மளிகை காய்கறி கடைகள் கூட திறக்கப்படவில்லை. மேலும் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளில் கூட வாகன போக்குவரத்து இன்றி அமைதி நிலவியது.

முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இது மக்கள் சாலைகளில் நடமாட்டம் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

தலைப்புச்செய்திகள்