Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பலமான பிரேத பரிசோதனை அறிக்கை: சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு

ஜுன் 30, 2020 09:41

மதுரை: "சாத்தான்குளம் தந்தை, மகன் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. எனவே, சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது,'' என்று நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் லாக்அப்பில் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் இருவரும், கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நேற்று, நீதிபதிகள்  பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் பிரேத பரிசோதனை நடைபெற்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளன. எனவே, சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நொடி கூட வீணாக்க கூடாது. சி.பி.ஐ. விசாரணையை துவக்கும்வரை, நெல்லை சரக டி.ஐ.ஜி. அல்லது நெல்லை சி.பி.சி.ஐ.டி. பிரிவு உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் சீலிட்ட உரையில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நீதிபதிகள் குறிப்பிட்டதன் அடிப்படையில் இருவரது உடலிலும் அதிக காயங்கள் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சீலிட்ட கவரில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முழு விவரம் வெளியுலகத்துக்கு தெரியவில்லை. தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் இருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது, போலீசாருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்