Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அப்போதும், இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்: சந்தேகம் வேண்டாம்: இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

ஜுன் 30, 2020 09:51

புதுடெல்லி: "அன்றைக்கும் நேரு பக்கம்தான் நாங்கள் நின்றோம். இன்றும் எங்களுக்கு  இந்த நாடும், அதன் இறையாண்மையும் தான் முக்கியம். எங்களின் தேசபற்று அதிகம். அதனால் எங்களின் தேசப்பற்றை யாரும் சந்தேகிக்கவும், அதை பற்றி கேள்விகூட எழுப்ப வேண்டாம்," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சீனா எப்போதுமே தனது ஆதரவாளர்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் அதற்கு மிக மிக அதிகமாக துணை போவது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களே அதற்கு எடுத்துக்காட்டு என்று வழக்கமாக சொல்வதுண்டு. அதுமட்டுமில்லை, எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூளும் அபாயம், அல்லது பதற்றத்தின் உச்சம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கு ஆதரவாக நிற்கின்றன என்ற சந்தேக கண்களும் ஊடுருவும்.

இதற்கு காரணம், அன்றைய காலம்தொட்டு, சீனாவுடன் கம்யூனிட் கட்சி நல்ல இணக்கத்துடன் இருப்பதால் இந்த கேள்வி எழும். இந்த சந்தேகம் மறுக்க முடியாததும்கூட.. இயல்பாகவே வரக்கூடியது தான். தற்போதைய நிலையிலும் அப்படி ஒரு சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துள்ளது.. சீனாவுடன் நமக்கு இணக்கமாக இல்லாத போக்கின் தன்மை தீவிரம் அடைந்துள்ளதாலேயே இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விளக்கமளித்ததாவது:

சுதந்திர போராட்டத்தின்போதே முன்னின்றவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான். பூர்ண ஸ்வராஜ் என்ற கோஷமும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது இல்லை. காரணம், ஆங்கிலேயருக்கு அவர்கள் உதவிகரமாக இருந்தனர்.
சுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே சீனபுரட்சியும் முடிவுக்கு வந்தது. அப்போதிருந்துதான் இரு நாடுகளுமே நட்பை பேணிக்காக்க தொடங்கின. ஹிந்தி சைனி பாய் பாய் என்ற கோஷமும் அப்போதுதான் உருவானது.. இதற்கு பிறகு இந்தியா தன்னிகரற்று வளர தொடங்கியது. தொழிலில் புரட்சி ஏற்படுத்தியது. அதாவது சீனா சோஷிலிச பாதையில் பயணித்தது.

இதன்பிறகு 10 வருடம் கழித்து அதாவது 1958ம் ஆண்டு எல்லை பிரச்சனை வந்துவிட்டது. நம் இருநாட்டு உறவும் மோசமானது. அப்போது மக்மாகன் கோட்டை எல்லையாக வரையறுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தவும் செய்தோம். எனினும், பிரிட்டிஷாரால் வரையறுக்கப்பட்ட அந்த எல்லைக்கோட்டை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், 1959-ல் அந்த மக்மோகன் கோட்டை மீறி சீனா நமது எல்லைக்குள் புகுந்துவிட்டது. விளைவு, 1962ம் ஆண்டு போர் வரை கொண்டுவந்து விட்டது. அந்த சீன போரின்போதுகூட நாங்கள் முழுமையாக இந்தியாவுக்குதான் ஆதரவு தந்தோம். சீனா அப்படி உள்ளே புகுந்தது தப்பு என்று பகிரங்கமாக குற்றத்தை எடுத்து சொன்னோம். நேரு பக்கம்தான் நாங்களும் நின்றோம். இந்திய ராணுவத்துக்கு நிதி திரட்டி உதவி செய்தோம். இதனால் எங்களுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவுதான் பாதிக்கப்பட்டது.

அதேபோல, 1976ம் ஆண்டு 2 நாடுகளும் திரும்பவும் எல்லை பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தையை தொடங்கின.. ஆனால், அப்போதும் அமைதியாக இருந்த நாங்கள், 1985ல் தான் சீன கம்யூனிஸ்டுடன் திரும்பவும் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். எங்களுக்கு இந்த நாடும், அதன் இறையாண்மையும் தான் முக்கியம். எங்களின் தேசபற்றும் அதிகம்தான். அந்த பற்றை யாரும் சந்தேகிக்கவும், அதை பற்றி கேள்விகூட எழுப்ப வேண்டாம். இவ்வாறு டி.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்