Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் 18 மருத்துவமனைக்கு அலைந்து பெட் கிடைக்காமலேயே உயிரிழந்த முதியவர்

ஜுலை 01, 2020 10:40

பெங்களூரு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதை கடந்த முதியவர் பெங்களூருவில் 18 மருத்துவமனைகளுக்கு அலைந்து படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு.க்கள் இல்லாததால் உயிரிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

பெங்களூரு நகரின் நாகரத்பேட்டையில் வசிக்கும் 50 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன், மூச்சுத்திறனால் போராடிய நிலையில் பெங்களூருவில் உள்ள 18 மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், படுக்கைகள் பற்றாக்குறையால் யாரும் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் அவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வரும் நிலை ஏற்பட்டதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.

அவரது மருமகன் பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய போது, ​​"மாமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது, நாங்கள் அவரை பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றோம், ஆனால், அவர்களில் எவருக்கும் ஒரு படுக்கை கூட இல்லை. அரசாங்கத்தால் நடத்தப்படும் போரிங் மருத்துவமனை கொரோனா பரிசோதனை அறிக்கையை தருமாறு கேட்டது. ஆனால், சனிக்கிழமை மாலை என்பதால், அதைச் செய்ய முடியவில்லை," என்றார்.

மருத்துவமனை அதிகாரிகள் அவரது மாமாவை (கொரோனா நோய் பாதித்தவரை) பரிசோதித்து, அவரை ஒரு ஐ.சி.யு.வில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த மருத்துவனையிலும் ஒரு காலியிடம் கூட இல்லை. அப்பல்லோ, ஃபோர்டிஸ், மணிப்பால் போன்ற தனியார் மருத்துவமனைகள் கூட படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு.க்கள் பற்றாக்குறையால் அவரது மாமாவுக்கு சிகிச்சையளிக்க தயாராக இல்லை.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மருமகன், உண்மையில், அவரது மாமாவை அனுமதிக்க சுமார் 50 மருத்துவமனைகளை அணுகியிருக்கிறார். அதில், 18 மருத்துவமனைக்கு நேரிலேயே சென்று கேட்டிருக்கிறார். ஆனால், அனைத்து மருத்துவமனைகளும் அனுமதிக்க மறுத்தன. அதற்கு சொன்ன ஒரே காரணம் படுக்கைகள் எதுவும் இல்லை என்பது தான்.

சனிக்கிழமை அந்த 50 வயது முதியவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ராஜாஜிநகரில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். முடிவுகள் திங்கள்கிழமை அவர்களுக்கு வழங்கப்பட இருந்தன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்து வீட்டில் சிகிச்சை அளித்தனர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை மாலை முதியவரின் நிலை மோசமடையத் தொடங்கியது. "நாங்கள் மருத்துவமனைகளுக்கு முன்பாக கெஞ்சினோம். மனிதநேயம் இறந்தது போல இருந்தது. ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க கூட அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை," என்று மருமகன் வேதனையுடன் தெரிவித்தார். இறுதியாக, அரசின் பவுரிங் மருத்துவமனை அவரது மாமாவை மிகவும் ஆபத்தான நிலையில் அழைத்துச் சென்றது. வென்டிலேட்டர் போடப்பட்ட 10 நிமிடங்களுக்குள் 50 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தலைப்புச்செய்திகள்