Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா

ஜுலை 05, 2020 07:21

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து முயற்சிகளையும் கொரோனா வீழ்த்தி வருகிறது.

சாமானியனை மட்டும் அல்லாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரையும் கொரோனா ஆட்டி படைக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே கொரோனாவால் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 18 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனும் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு்- கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ராமநாதன். இவர் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் 8 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஏற்கனவே சாத்தான்குளத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கு சென்று பொறுப்பு ஏற்க இருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைப்புச்செய்திகள்