Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீன் விற்றவர்-மனைவிக்கு கொரோனா தொற்று: மீன்வாங்க சென்றவர்கள் அதிர்ச்சி

ஜுலை 06, 2020 08:30

வடசேரி : மீன் விற்றவர் மனைவிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் வியாபாரிகள் மீன்வாங்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக வடசேரி பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த சந்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு தொற்று ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர்காவல் படையினருக்கும் பாதிப்பு உருவானது.

கொத்து கொத்தாக தொற்று உருவானதால் வடசேரி சந்தையை கொரோனா புரட்டி போட்டது. இந்த சந்தை நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விட்டது. காய்கறி வாங்க சென்றவர்களுக்கும் தொற்று இருக்குமோ என்ற அச்சம் தொடர்ந்து நிலவுகிறது. இதற்கிடையே குமரியில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக கருதப்படும் மார்த்தாண்டத்தில் பிரபலமான மீன்சந்தையிலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உருவாகி உள்ளது. இது அடுத்த பரவலுக்கு அச்சாரமாக அமைந்து விடுமோ என்ற பீதியும் நிலவுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு்- மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான மீன் காய்கறி சந்தை உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் காய்கறி சந்தை தற்காலிகமாக மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அத்துடன் நவீன முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த மீன்சந்தையும் மூடப்பட்டு பக்கத்தில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிகமாக மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் நந்தன்காடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் மீன் விற்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் நந்தன்காடு பகுதிக்கு சென்று மீன் வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் மீன் வியாபாரிக்கும் அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார்இ சுகாதார ஆய்வாளர் ஜெனின் செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் நந்தன்காடு பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளித்து பிளச்சிங் பவுடர் தூவி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் மீன் வியாபாரியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

மார்த்தாண்டம் சந்தையில் மீன் விற்று வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் பழகிய வியாபாரிகள் மீன் வாங்கி சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தையில் இருந்து மீன் வாங்கி சென்ற சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்