Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிதம்பரத்தில் சிகிச்சைக்காக அனுமதி: கொரோனா வார்டில் கபடி விளையாடிய வாலிபர்கள்

ஜுலை 07, 2020 06:05

சிதமபரம்: சிதம்பரம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில் வாலிபர்கள் சிலர் அங்கு கபடி விளையாடினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோர பிடிக்குள் சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அதனால் தான் இன்றைய சூழலில் மனித குலத்தின் ஒட்டுமொத்த எதிரியாக கொரோனா உருவெடுத்து நிற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிப்பானது தற்போது வேகம் எடுத்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து இருப்பதுடன் தினம் தினம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

அந்த வகையில் மாவட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு இருக்கும் மருத்துவமனைகளில் ஒன்று சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகும். இங்கு அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அங்கும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்றைய சூழலில் மாவட்டத்தில் மொத்தம் 352 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 பேர் கோல்டன் ஜூப்ளி விடுதியில் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்கள் பலர் மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்றும் அவர்கள் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்கொண்டால் அதை வென்று மீண்டு வர முடியும் என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக டாக்டர்கள் உள்பட பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகையை சூழலில் மன அழுத்தத்துக்கு விடை கொடுக்கும் விதமாக கோல்டன் ஜூப்ளி விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் சிலர் விடுதி மொட்டை மாடிக்கு சென்று கபடி விளையாடியதாக தெரிகிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த வீடியோவில் இளம் வயதுடைய சிலர் கபடி ஆடுவதும் அதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்து வருவதுமாக அமைந்திருந்தது. இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர் அந்த விடுதிக்கு சென்று மொட்டை மாடி கதவை இழுத்து பூட்டி சென்றனர்.

தலைப்புச்செய்திகள்