Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூக்கில் பிணமாக தொங்கிய பெண்: ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

ஜுலை 07, 2020 06:07

தூக்கில் பெண் பிணமாக தொங்கிய வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி அவரது உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள ஸ்ரீராமன் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகள் தனலட்சுமி (42). திருக்களப்பூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் தற்போது அவரது கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து தனது தாய் வீட்டில் 2 மகன்கள் ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

4-ந்தேதி மாலை தனலட்சுமி மேல்புளயங்குடி பெலாந்துறை வாய்க்கால் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக மணிக்கம் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ஒருவரும் அவரது மகன்கள் 2 பேரும் சேர்ந்து தனலட்சுமியை கொலை செய்து விட்டனர் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் புகாரில் குறிப்பிட்டிருந்த 3 பேரையும் கைது செய்ய கோரியும் கொலை வழக்காக பதிவு செய்ய கோரியும் தனலட்சுமியின் குடும்பத்தினர் உறவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் திருமாறன் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டக்குழு பிரகாஷ் உள்பட பலர் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தனலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வந்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 

இதற்கிடையே மாலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து தனலட்சுமியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முன்வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனையின் போது 4 டாக்டர்களை பயன்படுத்த வேண்டும் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை அவரது குடும்பத்தினர் முன்வைத்திருந்தனர்.

இதற்கு செவிசாய்க்காமல் பிரேத பரிசோதனையை போலீசார் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்