Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளில் பசியால் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: ஐகோர்ட்

ஜுலை 07, 2020 05:35

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்திய சமூக நல நிதியம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். மேலும், இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய சமூக நல நிதியம் மூலமாக வெளிநாடுகளில் பசியாலும், வறுமையாலும் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தமிழக விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காததாலேயே அவர்கள் தமிழகம் திரும்பவில்லை என கூற முடியாது என தெரிவித்தார். ஏராளமான தமிழர்கள் மற்ற மாநில விமான நிலையங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பியதாகவும் விளக்கமளித்தார். மேலும், இதுவரை வெளிநாடுகளில் சிக்கி இருந்த 43 சதவீத தமிழர்கள் தமிழகம் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 11 ம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்திய சமூக நல நிதியம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்