Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தை  அதிகாரி பூட்டிச்சென்றதால் பரபரப்பு

ஜுலை 09, 2020 09:31

அரிமளம்: ஊழியர்களை தரக்குறைவாக நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தை அதிகாரி பூட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிமளம் பேரூராட்சியில் செயல் அலுவலராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 13-ந் தேதி பேரூராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம் நடத்தி கோரிக்கைகளை மனுக்களாக செயல் அலுவலரை சந்தித்து வழங்குவது என்று பணியாளர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து பணியாளர்கள் அனுமதி கேட்டபோது செயல் அலுவலர் தன்னை இப்போது சந்திக்க முடியாது 2 வாரம் கழித்து பணியாளர்கள் கூட்டத்தை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி கூட்டத்தை நடத்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளிக்க பேரூராட்சி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் வந்தனர். அப்போது செயல் அலுவலர் அவர்களை சந்திக்காமல் வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த பணியாளர் சங்க நிர்வாகிகள் திருச்சியில் உள்ள பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கருப்பையாவிடம் மனு அளித்துள்ளனர்.

அவர் அந்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உமாமகேஸ்வரி செயல் அலுவலர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் செயல் அலுவலர் விடுப்பில் சென்று விட்டார்.

இதையடுத்து அவர் பணிக்கு திரும்பினார். மேலும் அங்கு வந்த பேரூராட்சி உதவி இயக்குனர் கருப்பையா பேரூராட்சி பணியாளர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை மேற்கொண்டார். பேரூராட்சி ஊழியர் புவனேஸ்வரி காலை 9.55 மணிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளார். அப்போது செயல் அலுவலர் மணிகண்டன் நீங்கள் ஏன் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டீர்கள் தாமத வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அலுவலகத்திற்கு வந்த இளநிலை உதவியாளர் பூங்கோதையிடமும் தாமத வருகை பதிவேட்டில் தான் கையெழுத்து போட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செயல் அலுவலர் மணிகண்டன் இளநிலை உதவியாளர் பூங்கோதையை தாக்க கை ஓங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் செயல் அலுவலர் மணிகண்டன் மீது புகார் கொடுக்க அரிமளம் போலீஸ் நிலையம் சென்றனர். இதில் பேரூராட்சி ஊழியர்களை அவர் ஆபாசமாக பேசி தரக்குறைவாக நடத்துவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே செயல் அலுவலர் மணிகண்டன் அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் அங்கு திரும்பிய பேரூராட்சி பணியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் பால.தண்டாயுதபாணி பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கருப்பையா திருமயம் தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பேரூராட்சி பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை கோட்டாட்சியர் பால.தண்டாயுதபாணி திறந்து பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பேரூராட்சியில் வழக்கம்போல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனிடம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இதன் அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்