Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் விதிமுறைகள்: சாமானியனுக்கு சங்கடம்

மார்ச் 16, 2019 07:18

சென்னை: 'அம்மணி கழுத்துல மினுமினுக்குமே... ஒண்ணையும் காணோம்?'திருப்பூரில் உறவினர் வீட்டு விழாவுக்கு கிளம்ப ஆயத்தமான மனைவியை பார்த்து, கணவன் கேட்டதில் கிண்டல் தொனித்தது. 

'போன தடவ எலக்ஷனப்ப, கார்ல கல்யாணத்துக்கு போன குடும்பத்த, ரவுண்ட் கட்டிட்டாங்கோ... கழுத்து நெறைய நகை போட்டு வந்த பொம்பளைகிட்ட இருந்து நகையெல்லாம் பறிச்சுட்டாங்களே...''நாங்கூட மறந்துட்டேன்... ஆனா அந்த நகையெல்லாம் திரும்ப கொடுத்துட்டாங்களே...''அதுக்காக நடுவழில மாட்டிட்டு நா முழிக்கோணும்னு ஆசைப்படறீங்களாக்கு...'தம்பதியின் பேச்சு தொடர்ந்தது. திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட எந்த விழாக்களும், தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. 

இதை, அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், வாகனத்தில் செல்லும் போதும், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு செல்லும் போதும்,அதிகாரிகளின் சோதனைகளுக்கு உட்படாமல்செல்வது சிரமம்.நகை உட்பட பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுடன், யாரும் திருமணத்துக்கு செல்ல முடியாது. நடைமுறையில், இது சாத்தியமும் இல்லை. 

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்டவற்றை, கட்சிப் பிரமுகர்கள் கொண்டு சென்றபோது, அவை பறிக்கப்பட்டன.அப்போது, கட்சிப் பிரமுகர்கள் கூறிய காரணம், 'திருமணத்திற்கு வருவோருக்கு, திருமண வீட்டார் சார்பில் அன்பளிப்பாக வழங்குகிறோம்' என்பது தான்.அவர்கள், திருமண பத்திரிகையையும் ஆதாரமாக காட்டினர். ஆனால், உண்மையில், திருமண விழாவில், தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டு,வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட இருந்த லஞ்சம் தான், அந்த வெள்ளி டம்ளர்கள். 


மாட்டுச்சந்தை 

கடந்த முறை, சட்டசபைத் தேர்தல் பிரசார காலத்தில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மாட்டுச்சந்தை நடந்து கொண்டிருந்தது. அதன் அருகிலேயே அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர்.அந்த வழியாகத் தான் வியாபாரிகளும், விவசாயிகளும் கடக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை சோதனை செய்தபோது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பலரிடம் இருந்தது. ஓரிரண்டு மாட்டை விற்றால் கூட, கிடைக்கக்கூடிய பணம், 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும். இந்த பணத்துக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஆனால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 'இது நியாயமே இல்லை' என, பாதிக்கப்பட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் குமுறினர். 

ரூ.4.15 கோடி 
ஆனாலும், அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால், தேர்தல் முடியும் வரை, மாட்டுச் சந்தையில் வர்த்தகம் முழுமையாக ஸ்தம்பித்தது.லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் மட்டும், 4.15 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதெல்லாம், அரசியல் பிரமுகர்கள் உஷாராகி விட்டனர்.அவர்களுக்கு தேர்தல் விதிமுறை குறித்து நன்கு தெரியும். வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டிருந்தால், அந்த பணமோ, பொருளோ, வார்டு அளவிலோ, தெரு அளவிலோ சென்றுவிட்டது என்பதே உண்மை.இரவு, பகலாக வாகன சோதனைகள் நடத்தப்பட்டாலும், இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் அப்பாவிகள் தான். 

சென்னை, கோவை, திருப்பூர் உட்பட வர்த்தக நகரங்களில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல முடியாது என்ற கண்டிப்பு, வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதே.சிறு நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு வார சம்பளம் வழங்கப்படுகிறது. கட்டுமான பணி போன்ற நிறுவனம், அமைப்புசாரா பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, பணமாகத் தான் கூலியை வழங்கியாக வேண்டும். 

இதற்காக, பணத்தை ஓரிடத்தில் இருந்து எடுத்து செல்வதில், சில சங்கடங்கள் இருக்கின்றன. இதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் வைத்திருந்தாலும், வாகனத்தை நிறுத்திஅதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என, வர்த்தகர்களிடம் ஆதங்கம் இருக்கிறது.விதிமுறைகள் நன்மைக்கே. ஆனால், அந்த விதிமுறைகள், சாமானியர்களுக்கு சங்கடங்களை தந்து கொண்டு தான் இருக்கின்றன.  

 

தலைப்புச்செய்திகள்