Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 மூட்டை விதை வெங்காயம் திருட்டு

ஜுலை 11, 2020 06:00

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம்  விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆடிப்பட்டம் துவங்கியுள்ளதால் இப்பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செட்டிக்குளம் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்ற விவசாயி தனது நிலத்தில் சின்னவெங்காயம் நடவு செய்வதற்காக தான் பட்டறை போட்டு இருப்பு வைத்திருந்த சுமார் 10 மூட்டை சின்ன வெங்காய விதைகளை சரி செய்து வயலுக்கு அருகே பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.

மேலும் வயலையும் உழவு செய்து பார் பிடித்து தயார் செய்திருந்த நிலையில் நேற்று காலையில் நடவு பணிக்காக கூலி ஆட்களுடன் வயலுக்கு வந்த போது, வயலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விதை வெங்காயத்தில் 5 மூட்டை வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து விதைப்பதற்கு போதிய வெங்காயம் இல்லாததால் ஆட்கள் அனைவரும் நடவு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர். தற்போது சின்ன வெங்காயம் ரூ.60 விற்பனையாகும் நிலையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 65 கிலோ எடைக்கொண்ட 5 மூட்டை விதை வெங்காயம் வாங்குவதற்கு போதிய வசிதி இல்லை என்றும், என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பச்சமுத்து தெரிவித்தார்.

 இதுபோன்று தொடர்ந்து நடைபெறும் வெங்காய திருட்டுக்கு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேற்கொண்டு பாடாலூர் போலீசாரிடம் இது குறித்து புகார் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்று வயலில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சின்ன வெங்காயம் திருடு போவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்