Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை எஸ்.ஐ. கொரோனா தாக்கி மரணம்

ஜுலை 14, 2020 07:39

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த போலீஸ் எஸ்.ஐ. குருமூர்த்தி, 55, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.ஐ.குருமூர்த்தி உயிரிழப்பை தொடர்ந்து சென்னை காவல்துறையில் 4 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகமாக கொரோனா பரவி வருவதால் உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் உலக மக்களின் பொதுவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு பணியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கி மூன்று காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் தற்போது சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி கொரோனா தாக்கியதில் உயிரிழந்துள்ளார். காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார் குருமூர்த்தி. மதுராந்தகத்தை சேர்ந்த அவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா தொற்று உறுதியானது. கடந்த மாதம் 26ம் தேதி குருமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பு அதிகமானதை அடுத்து மூச்சுத்திணறல் காரணமாக அவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குருமூர்த்தியின் மரணத்தை தொடர்ந்து மாநகர காவல்துறையில் இதுவரை 4 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்