Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது இயலாத காரியம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஜுலை 14, 2020 04:58

புதுச்சேரி: ''புதுச்சேரி கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது என்பது தற்போதைய சூழலில் இயலாத காரியம்,'' என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வைத்திக்குப்பம் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ததில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் 2 நாட்களுக்கு முன் அந்த பகுதியில் நடந்த திருமணத்தில் உத்தரவை மீறி அதிகப்படியான மக்கள் குவிந்துள்ளனர். அதன் மூலம் 17 பேருக்கு தொற்று பரவி உள்ளது. இதுபோன்று கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது வீட்டை சுற்றி 25 மீட்டர் தூரம் வரை தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டு வந்தது. இதை தவிர்த்து பாதித்தவர்கள் வசிக்கும் வீட்டிற்கு இடது, வலதுபுறம் என 3 வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அமைச்சரவை கூட்டப்பட்டு குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டது என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். பட்ஜெட்டுக்கான ஒப்புதல் பெற 40 நாட்களுக்கு முன்பு கோப்புகளை அனுப்பினோம். மத்திய அரசிடம் இருந்து சில விளக்கம் கேட்டனர். அதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கொடுத்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கவர்னரின் உரை, பட்ஜெட் சம்பந்தமான உரை தயாரிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், எழுத்துப்பூர்வ உத்தரவு வரவில்லை என்பதால் நாங்கள் அந்த கூட்டத்தில் வேறு சில முடிவுகளை எடுத்து விட்டு பட்ஜெட், கவர்னரின் உரை சம்பந்தமான முடிவுகளை ஒத்திவைத்துள்ளோம்.

ஒரு சிலர் சட்டமன்றத்தை பல நாட்கள் நடத்த வேண்டும் என்கின்றனர். அதை முடிவு செய்வது சபாநாயகர் தான். அவர் சட்டமன்ற அலுவல் குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்வார். கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் குறுகிய நாட்களில் சட்டசபை கூட்டத்தை முடித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் கூட கூட்டப்படவில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்பட அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம்.

சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது என்பதாலும், நகரப் பகுதி மக்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உள்ளதை கருத்தில் கொண்டும் ஏற்கனவே செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

புதுவை பல்கலைக்கழகத்தில் குறிப்பாக மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் எங்களை சந்தித்து தற்போது நாங்கள் களத்தில் இருந்து பணி செய்து வருகிறோம். எனவே, படிப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி உள்ளனர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

தலைப்புச்செய்திகள்